பழனி கோவில் இணையதளம் முடங்கியதால் பக்தர்கள் அவதி..!

435

காணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணபரிவர்த்தனைகளுக்கான பழனி கோயிலின் இணைய தள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணபரிவர்த்தனைக்கான ஒப்பந்தம் புதிய நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழனி, திருத்தணி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்ட சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவில் 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து, இந்து அறநிலையத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், பழனி கோவிலின் இணையதள வசதிகள் முடங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, திருத்தொண்டர் சபையினர், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் சிரமப்பட்டு வந்தநிலையில், பழனி கோவிலின் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் palanimurugantemple.org என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையத்தை கும்பகோணத்தை சேர்ந்த அண்ணா சிலிக்கான் டெக்னாலஜி என்ற நிறுவனம் பராமரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வருங்காலங்களில் இந்து சமய அறநிலையத்துறையே இந்த இணையத்தை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.