கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் சிறுமி உட்பட நான்கு பேர்…

419

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த போத்தனூர் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கணேசபுரத்தில் 12 வயது சிறுமி காயத்ரி என்பவர் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒற்றை யானை தூங்கி கொண்டிருந்த சிறுமியை காலால் மிதித்தது. இதில், அந்த சிறுமி துடி துடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஆத்திரம் அடங்காத அந்த யானை அதே பகுதியில் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பெண்கள் ஜோதிமணி, நாகம்மாள் ஆகியோரை
தும்பிக்கையால் தூக்கி வீசியது. உயிர் பிழைத்தால் போதும் என இருவரும் ஒட முயற்சித்தபோது அவர்களை துரத்தி துரத்தி மிதித்து கொன்றது.
மேலும், கொலை வெறி அடங்காத அந்த மதப்பிடித்த யானை வயக்காட்டில் வேலைக்கு சென்ற பழனிச்சாமி என்ற விவசாயியை காலால் மிதித்து கொன்றது. இதில், ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். இதேபோன்று, யானை தாக்கியதில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மதம் பிடித்து திரியும் காட்டுயானையை வனப்பகுதிக்கு விரட்டும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே,
யானையை பிடிக்கும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.