மதுக்கரை அருகே மீண்டும் புதிதாக புகுந்துள்ள ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

265

கோவை மாவட்டம் மதுக்கரையில் சுற்றித் திரி்ந்த மகாராஜ் என்ற காட்டு யானை பல நாள் போராட்டத்திற்கு பின் வனத்துறையால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த யானை நேற்று உயிரிழந்தது.
இந்த நிலையில், உயிரிழந்த ஒற்றை யானை வந்து சென்ற மதுக்கரை ராணுவ முகாம் வளாகத்துக்குள் நேற்று இரவு மீண்டும் ஓர் ஒற்றை யானை புகுந்துள்ளது.
தகவல் அறிந்து சென்ற வனத் துறையினர் பட்டாசு வெடித்து அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் மழை பெய்ததால் யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் விரட்டியதையடுத்து, யானை மதுக்கரை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. எனினும், முன்னதாக மயக்க ஊசி போட்டு, பிடித்துச்செல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்த யானையை தேடி இந்த யானை வந்திருக்கலாம் எனக்கூறும் அப்பகுதி மக்கள், மீண்டும் யானை கிராமப்பகுதியில் வரலாம் என்று தெரிவிக்கின்றனர். யானையை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.