பேரிடர் மேலாண்மை பயிற்சியில் ஈடுபட்ட மாணவி உயிரிழப்பு..!

767

பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை நரசிபுரத்தில் செயல்பட்டு வரும் கலைமகள் என்ற தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. தீ விபத்து போன்ற பேரிடர்கள் ஏற்படும் போது மாடியில் உள்ள அவசர வாயில் வழியாக தப்பிச் செல்வது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி 2-வது மாடியில் இருந்து கீழே உள்ள வலையில் குதிக்க இருந்தார். அப்போது அருகிலிருந்த பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவி லோகேஷ்வரி பாதுகாப்பு கயிறு கட்டாத நிலையில் அவரை கீழே தள்ளிவிட்டார்.

இதனால் மாணவி லோகேஷ்வரி சன்ஷேட்டில் அடிபட்டு கீழே இருந்த வலையில் விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த லோகேஷ்வரி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.