கொடநாட்டில் நடைபெற்ற மர்ம கொலை | சிறப்பு விசாரணை குழு அமைக்க முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

105

கொடநாடு கொலை, கொள்ளைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பங்கு இருப்பதாக கூறப்படுவது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆணையிட வேண்டுமென முன்னாள் எம்.பி. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு கொட நாடு பங்களாவின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொல்லப்பட்டார். பிறகு முன்னாள் முதல்வரின் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார். இரு தினங்கள் கழித்து கொடநாட்டில் வேலை செய்த சயனின் மனைவி, குழந்தை விபத்தில் உயிரிழந்தனர். சயன் மட்டும் தப்பி விட்டார். இப்படி பல மர்மங்கள் நீடித்த வந்த நிலையில், தெகல்கா புலனாய்வு இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ, தனது முயற்சியால் திரட்டியுள்ள தகவல்களை டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிட்டார். அப்போது உயிர் தப்பிய சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் பேட்டியளித்தனர்.

அவர்கள் அளித்த பேட்டியில் கொடநாடு பங்களாவில் ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இவை அனைத்தும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரிலேயே நடைபெற்றதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்றம் தாமாக முன்வந்து சிறப்பு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.