குடியிருப்புக்குள் அட்டகாசம் செய்த காட்டு யானை கூட்டம்… வெடி வெடித்து காட்டுக்குள் விரட்டிய வனத்துறை

141

கோவை அருகே குடியிருப்புக்குள் நுழைந்த காட்டுயானை கூட்டத்தை வனத்துறையினர் விடிய விடிய போராடி காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
கோவை மதுக்கரை பகுதியில் அண்மை காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், மதுக்கரை ராணுவ முகாம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் ஒரு குட்டி யானை உட்பட 5 யானைகள் நுழைந்துள்ளன. இதனை கண்டு மிரண்டுபோன அப்பகுதிமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதுடன் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த யானை கூட்டம், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு, வீட்டு உபயோக பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் விடிய விடிய போராடி பட்டாசுகளை வெடிக்க வைத்து யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டியடித்தனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.