திமுக சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி..!

434

கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரையுல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோரும் கருணாநிதி படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, அரசியல், கலைத்துறை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனைகளை படைத்தவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார். தமிழ் திரைப்பட வரையறைகளை உடைத்தெரிந்து வந்திருக்கிறாய் என கருணாநிதி தன்னை பாராட்டியதாக குறிப்பிட்ட பாரதிராஜா, அவரை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவின் அடையாளத்தை பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் மாற்றி அமைத்தவர் கருணாநிதி என தெரிவித்தார். தனது கொள்கைகளை சாமர்த்தியமாக உலகத்திற்கு திரைப்பட வசனங்கள் மூலம் கொண்டு சென்ற கருணாநிதி என புகழாரம் சூட்டினார். அரசியல், கலை, இலக்கியத்தில் அவருடைய இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்றும் நடிகர் சிவக்குமார் குறிப்பிட்டார். இதனிடையே நடிகர் பார்த்திபன் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஸ்டாலினுக்கு இங்கு மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றும், அது மிகப்பெரிய டானிக்காக இருக்கும் என்று கூறினார். அப்போது ஸ்டாலினை மேடைக்கு அழைத்து, மஞ்சள் நிறத்துண்டை பார்த்திபன் அணிவித்தார். இதே போன்று பிரகாஷ்ராஜ், மயில்சாமி உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்களும் கலந்து கொண்டு கருணாநிதி குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.