கோயில் விலங்குகளின் பராமரிப்பு: ஆய்வுசெய்ய குழு அமைப்பு! உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்!!

207

சென்னை, ஜூலை.24–
கோயில்களில் உள்ள விலங்குகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநில அளவிலான குழுவை அமைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் மாடுகள், கன்றுக்குட்டிகள், யானைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் 3 கோயில் யானைகள் அடுத்தடுத்து இறந்ததால் விலங்குகளைப் பராமரிக்க ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதா ராஜன் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சதீஷ் பராசரன், ‘வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, கோயில் நிர்வாகத்தினரால் பராமரிக்க முடியுமா? என்பதை வன அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, வன விலங்குகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.
இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், “ஜூலை 20-இல் மாநில அளவிலான ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க 2 மாத கால அவகாசம் வேண்டும்’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கோயில் யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது வனத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும்.
கும்பகோணத்தை அடுத்துள்ள திருவிடைமருதூர் கோயில் யானை உடல் நலம் சரியில்லாமல் இருந்ததாகவும், சிகிச்சைக்கு பின்னர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
அந்த யானை எந்த நிலையில் உள்ளது? என்பதை விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 7-க்கு தள்ளி வைத்தனர்.