கொடநாடு எஸ்டேட்டில் இருந்த பல நூறு கோடி பழைய ரூபாய் கூட்டுறவு வங்கிகள் மூலம் மாற்றம்!

1192

பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டில் இருந்த பல நூறு கோடி ரூபாய் பழைய நோட்டுகள், கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமைச்சர்களிடமும் விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
கொடநாட்டில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டில், 5 நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை முடிவடைந்தது. இரவு, பகலாக வீ்ட்டிற்கு கூட அனுப்பாமல், எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கொண்ட விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதிகாரிகள் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலமாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக எஸ்டேட் மேலாளர் நடராஜன் கூறியுள்ளார்.
எனவே அடுத்த கட்டமாக, மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த ஒரு சில அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.