கூடங்குளம் முதல் அணுஉலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி. பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்பு.

237

கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாட்டிற்கு அர்பணிக்கும் விழா இன்று பிற்பகல் நடைபெறுகிறது. மாஸ்கோ, டெல்லி, சென்னை ஆகிய இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் அணுமின் நிலையத்தை அர்ப்பணிக்கும் விழா நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் 4 உலைகளை கொண்ட அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 2002ம் ஆண்டு மார்ச் மாதம் அணுமின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அணுமின் நிலையத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டதால், திட்டமிட்டபடி உரிய காலத்திற்குள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென்னக மின் தொகுப்போடு இணைக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை முறையில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. அங்கு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாட்டிற்கும் அர்பணிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க விழா இன்று நடைபெறுகிறது.

மாலை மூன்றரை மணி அளவில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அதிபர் புதின், டெல்லியில் இருந்து பிரதமர் மோடி, சென்னையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நாட்டிற்கு அர்ப்பணிக்கின்றனர்.

முதல் 2 அணு மின் நிலையங்களையும் அமைக்க 17 ஆயிரத்து 270 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இதற்காக ரஷ்யா தரப்பில் 6 ஆயிரத்து 416 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 3வது மற்றும் 4வது அணு உலைகளுக்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று, கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அணு உலைகளை கட்டி முடிக்க 39 ஆயிரத்து 747 கோடி ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.