கேரள மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

349

கேரளாவில் பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கொல்லம், கொச்சி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை நாளை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.