பக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் – கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

146

சபரிமலையில் பக்தர்களிடம் கெடுபிடி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என போலீஸாருக்கு கேரள உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சபரிமலையில் காவல்துறையினர் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பக்தரகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை நடவடிக்கைகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கோவில் சன்னிதானத்தை விட்டு பக்தர்கள் வெளியேறச் சொல்ல போலீஸாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பக்தர்களிடம் கெடுபிடி செய்தால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட கேரள உயர்நீதிமன்றம், சபரிமலையில் பாதுகாப்பு தொடர்பாக என்னென்ன விதிமுறைகள் போடப்பட்டுள்ளது என்பது குறித்து மாநில காவல்துறை தலைவர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.