பிரதமர் மோடி இன்று கேரளா செல்வார் என தகவல்..!

233

தொடர் கனமழை, வெள்ளத்தால் உருக்குலைந்துபோன கேரளாவை பார்வையிட பிரதமர் மோடி இன்று செல்லவிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதை அடுத்து, அம்மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. லட்சக்கணக்கானோர் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டு, உடனடியாக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் 100 கோடி நிதியுதவி போதாது என்று தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநிலத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனவே, மத்தியக்குழு மீண்டும் வந்து பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து பிரதமர் மோடி இன்று வெள்ள சேத பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கை முடித்த பின்னர் கேரளாவிற்கு புறப்பட்டுசெல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. கேரளாவில் வெள்ள பாதிப்புகளை இன்று பார்வையிடும் பிரதமர் மோடி, கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.