கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் நேரில் சென்று ஆய்வு..!

390

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அம்மாநில முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் ஹெலிகாப்டரில் ஒன்றாக நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தததை அடுத்து கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது. இதனால் நேற்று முன் தினம் இடுக்கி அணையின் ஒரு வாயில் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. இதனை அடுத்து இடுக்கி அணையின் 5 வாயில்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரியார் ஆற்றங்கரையோரம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் மீட்பு பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வெள்ள சேதங்களை ஆய்வு செய்தார். இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவருடன் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும் உடன் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.