கருணாநிதி பிறவியிலேயே ஒரு போராளி என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

382

சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கருணாநிதி ஒரு பிறவி போராளி என தெரிவித்துள்ளார்.

ரத்த அழுத்த குறைபாடு மற்றும் சிறுநீரக தொற்றுநோய் பாதிப்பு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து 6 -வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கருணாநிதியை உட்கார வைப்பதற்கு பயிற்சி அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை வருகை புரிந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழியிடம் அவர் நலம் விசாரித்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், தி.மு.க தலைவர் கருணாநிதி பிறவியிலேயே போராளி, மன உறுதி மிக்கவர் என்று கூறினார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார். இதே போல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கார்த்திக் சிதம்பரமும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர். நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை, கிங்காங், சிவகார்த்திகேயன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.