காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் உயர்மட்ட தொழில்நுட்பக்குழு இன்று ஆலோசனை. நீர் இருப்பு, பாசன பரப்பு குறித்து மேட்டூா் அணை, டெல்டா பாசன பகுதிகளில் அடுத்த வாரம் ஆய்வு.

130

காவிரி விவகாரத்தில் அணைகளின் நீர் இருப்பு மற்றும் பாசன பகுதிகளில் தண்ணீரின் தேவையை ஆய்வு செய்யும் மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையிலான 9 நிபுணர்களின் ஆலோசனைக்கூட்டம் இன்று பெங்களுருவில் நடைபெறுகிறது.
காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசு 7ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசு நீர்வள நிபுணர்குழு அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளையும், டெல்டா பாசனப் பகுதிகளையும் ஆய்வு செய்து வரும் 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் மத்திய நீர்வள ஆணையக் குழுவின் உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா கோதாவரி பாசன அமைப்பு தலைைம பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில செயலாளர்கள், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள் என 9 பேர் அடங்கிய உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில், தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவின் முதல் கூட்டம் பெங்களுருவில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், காவிரி தொடர்பாக, பொதுவான பிரச்னைகள் குறித்து மாநில தலைமை செயலாளர்கள், பொறியாளர்களிடம் கருத்து கேட்கும் நிபுணர் குழு, பின்னர் கர்நாடக மாநில அணைகளை பார்வையிட உள்ளது. இதனைத்தொடர்ந்து, மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் சாகுபடி பணிகளையும் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வின்போது இரு மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, அந்த மாநிலங்களின் பாசன பரப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த ஆய்வின் அறிக்கையை அவர்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இதனையடுத்து, அடுத்தவாரம் இந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.