காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னடர்கள் வெறியாட்டம். முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம்.

1067

காவேரி நதிநீர் பிரச்சனை குறித்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
காவிரியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி மாண்டியாவில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக எல்லையில் உள்ள விவசாயிகள் தமிழக முதலமைச்சர் உருவ படத்தை எரித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள், லாரிகள் எல்லை பகுதியான ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சரக்கு வாகனங்கள் கிருஷ்ணகிரியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காவிரி பிரச்னை காரணமாக பெங்களூருவில் உள்ள தமிழ்ப் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன,
இதனிடையே மைசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மற்றும் விவசாயிகள்
தமிழ் திரைப்படங்கள் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிட்டனர். அப்போது தமிழ் திரைப்பட பேனர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், விதான்சவுதாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரின் முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது, தீர்ப்புக்கு எதிராக இடைக்கால தடைபெறுவது என்பன உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, திட்டமிட்டபடி வரும் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.