காவிரியில் தமிழகத்துக்கு 20ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், கர்நாடகாவின் நடவடிகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

235

காவிரியில் தமிழகத்துக்கு 20ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், கர்நாடகாவின் நடவடிகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 6ம் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் முறையீடு செய்தது. இதை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலிதா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டாலும், அந்த தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

எனவே, கர்நாடக அரசின் இடைக்கால மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என கூறிய நீதிபதிகள்,

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, கர்நாடக அரசு வரும் 17ம் தேதி வரை 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

18ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, அதாவது 20ஆம் தேதி வரை 12 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, தண்ணீர் திறக்க பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடகம் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
——————