காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை..!

358

கர்நாடகாவில் 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால் கர்நாடக அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன. இதையடுத்து கபினி கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் 1 லட்சம் கன அடி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒக்கேனக்கலுக்கு வந்துள்ளதால் அப்பகுதி வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடி நிரம்பியுள்ள நிலையில், 1 லட்சம் கனஅடி நீர்வரத்து வரத்து காரணமாக இன்று அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர் திறப்பு 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதை அடுத்து, தமிழகத்தில் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை வழியாக கடலூர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படுவதால், ஏரியின் நீர்மட்டம் 46.7 அடியை எட்டி உள்ளது. இதனால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக குழாய் மூலம் 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியும் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் சென்னைக்கான நீர்திறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.