காவேரி மருத்துவமனையில் திமுக தொண்டர்களிடம் செல்போன், பணம் திருட்டு..!

234

காவேரி மருத்துவமனையில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்களிடம் செல்போன் மற்றும் பணம் திருடிய வாலிபர் காவல் துறையிடம் சிக்கினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இந்நிலையில் அங்கே கூடியிருந்த தொண்டர்களிடம் மணிபர்ஸ் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்த வாலிபரை கையும் களவுமாகப் பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிறகு அவரை பாதுகாப்பு பணியில் இருந்த அபிராமபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் புதுப்பேட்டையை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், கடந்த இரண்டு நாட்களாக காவேரி மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்களிடம் செல்போன்கள் மற்றும் மணிபர்ஸை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.