கதிராமங்கலத்தில் கிராமமக்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று பேச்சு வார்த்தை.

406

கதிராமங்கலத்தில் கிராம மக்களுடன் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓன்ஜிசி எண்ணெய்க் குழாய்களை புதிதாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரமாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஆய்வு செய்த தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கதிராமங்கலம் கிராம மக்களுடன் திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். மேலும் கிராம மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும் என்று கூறிய அவர், மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். கதிராமங்கலத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதால், 90 சதவீதம் போலீஸார் திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறிய அவர், எண்ணெய் கசிவு ஏற்பட்ட குழாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.