காதலிக்க மறுத்த மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபர். தானும் தீயில் கருகி பலியான பரிதாபம்.

241

காதலிக்க மறுத்த பெண்ணை, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து எரித்ததுடன், தானும் தீ வைத்துக்கொண்ட காதலன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். தனியார் மினி பஸ் ஓட்டுனர் ஆன இவர். விழுப்புரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நவீனா என்ற மாணவியை காதலித்ததாகவும். ஆனால் நவீனா அவரது காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு விழுப்புரம் மாம்பழப்பட்டு ரயில்வே கேட் பகுதியில் வலது கையும், காலும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். மாணவி நவீனாவின் உறவினர்கள் தான் தன்னை தாக்கி கை, காலை வெட்டி துண்டித்ததாக செந்தில் புகார் கூறியிருந்தார். ஆனால் போலீஸ் விசாரணையில் குடி போதையில், தண்டவாளம் அருகே படுத்து கிடந்த போது ரெயிலில் அடிபட்டு, கை, கால் துண்டானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவி நவீனாயும் 12 வகுப்பில் படிப்பை தொடர்ந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த செந்தில், கை, காலை இழந்த நிலையிலும், மீண்டும் நவீனாவை பின் தொடர்ந்து சென்று, காதலிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நவீனா தனது படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். மேலும் மாணவியின் பெற்றோரைச் சந்தித்து செந்தில் நவீனாவை திருமணம் செய்து வைக்கும்படி தகராறு செய்துள்ளார். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில், நவீனாவின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்ற செந்தில், திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததுடன், நவீனாவையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதில் இருவருக்கும் பலத்த தீ காயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று, இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார். மாணவி நவீனா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஒரு காதலால் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.