மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்..!

79

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சுமார் 2000 பேர் இருநூறு படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், மீனவர்களின் மீன்பிடி சாதனங்கள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதனைத்தொடர்ந்து, எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாகக் கூறி, ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர். இதனையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல், வெறுங்கையுடன் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ள சம்பவம், ராமேஸ்வரம் பகுதி மீனவ சமுதாய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.