காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வெளி மாநில மக்கள், சொத்து வாங்குவதையும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் ஜம்மு-காஷ்மீர் பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பையும் உறுதி செய்யும் சட்டப்பிரிவு 35ஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பறிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை என்று கூறி, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளநிலையில், காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், மாநிலம் முழுவதும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமர்நாத் புனித யாத்திரையும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஊர்வலங்களும், மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. எனினும், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.