காசிரங்கா பூங்காவில் இருந்து தப்பிய காண்டாமிருகங்களை தேடி வனத்துறை தேடுதல் வேட்டை! ஒன்றின் மீது குண்டு பாய்ந்ததால் கவலை !!

328

திஸ்பூர், ஜூலை 30–
அசாம் மாநிலத்தில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 24 பேர் பலியாகி விட்டனர். 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு திரும்பி உள்ளார்.
முதல்வர் சர்வானந்தா சோனாவால் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இந்நிலையில் அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்து, கனமழை மற்றும் வெள்ளத்தை பயன்படுத்தி சில காண்டாமிருகங்கள் தப்பியோடி விட்டன. இவை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மறைந்திருப்பது தெரிய வந்ததை அடுத்து வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வனத்துறை ஊழியர்கள் காண்டாமிருகங்களை பயமுறுத்த துப்பாக்கியால் சுட்டதில் தவறுதலாக ஒரு காண்டாமிருகம் மீது குண்டு பாய்ந்து விட்டது. அந்த காயத்துடன் காண்டாமிருகம் தப்பி சென்று விட்டது. அதனை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தோல் மற்றும் கொம்புக்காக காண்டாமிருகங்கள் சட்ட விரோதமாக கொல்லப்பட்டு வருகின்றன.
தப்பி சென்ற காண்டாமிருகங்கள் சட்ட விரோதிகளின் கையில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காசிரங்கா தேசிய பூங்கா அதிகாரி சுவாசிஷ் தாஸ் கூறியுள்ளார்.