காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து : ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை – பாகிஸ்தான்

406

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்தியாவுடன் தூதரக உறவை துண்டிப்பதாகவும், இருநாட்டு வர்த்தகத்தை தடை செய்வதாகவும் கூறியிருந்தது. இந்த பிரச்சினை குறித்து ஐ.நா. உள்பட உலகநாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அதற்கு பதிலாக அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.