காஷ்மீர் மாநில பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்த ஆளுநர் வோரா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முப்தி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இதனிடையே, காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியனை புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகர்களாக தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.வியாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த ஆளுநர் வோரா இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து இதில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.