முதல்வர் மற்றும் தமிழக போலீசாரை தரக்குறைவாகப் பேசிய நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது…….

636

முதல்வர் மற்றும் தமிழக போலீசாரை தரக்குறைவாகப் பேசிய நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாசை சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக காவல் துறையையும் தரக்குறைவாகப் பேசினார்.முதல்வர் பழனிச்சாமி தம்மை கண்டு அஞ்சுவதாக தெரிவித்த அவர், காவல்துறை துணை ஆணையர் அரவிந்தனுக்கும் சவால் விடுத்தார். காக்கிச் சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப் பார்க்குமாறு கூறினார்.
ஊடகங்களில் தாங்கள் தரும் செய்திகளை எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை என்றும் அந்த ஊடகங்களை நாடார்களும் பிராமின்களும் நடத்துவதால்தான் இந்த நிலை என்றும் ஆவேசமாகப் பேசினார். இதனையடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமைதியை சீர்குலைத்தல், இரு பிரிவுகளிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். சாதி மோதலை தூண்டும் வகையில் பேசிய நடிகர் கருணாசை கைது செய்யும்படி பல்வேறு அரசிகள் கட்சித் தலைவர்களும் அமைப்பினரும் வலியுறுத்தினர்.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் நடிகர் கருணாசை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.