கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் தன்னால் பங்கேற்க முடியவில்லை : ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம்

322

மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று சென்னையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.

தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில், கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், தேவகவுடா, நிதின்கட்காரி, குலாம்நபி ஆசாத், சரத்பவார், பரூக் அப்துல்லா, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால், நாராயணசாமி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். அகில இந்திய தலைவர்கள் பலர் பங்கேற்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால், சுமார் 40 ஆயிரம் இருக்கைகள் அமர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எழுதியுள்ள கடிதத்தில், தன்னுடைய உறவினர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் நேற்று மரணம் அடைந்து விட்டதால், கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதியின் குடும்பத்திற்கு, மீண்டும் ஒருமுறை தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.