கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : மருத்துவமனை முன் தொண்டர்கள் விடியவிடிய காத்திருப்பு

456

கருணாநிதி உடல் நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் ஏழாவது அறிக்கை இன்று பிற்பகல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் 27ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், கருணாநிதியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, அவருக்கு மஞ்சள் காமாலை தொற்று இருப்பதாகக் கூறி, கல்லீரல் சிறப்பு மருத்துவர் முகமது ரேலா தலைமையில் மருத்துவக்குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும், கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நேரில் கேட்டுச் சென்றனர். இந்தநிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். இந்த நிலையில், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களும், தி.மு.க. எம்.பிக்களும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தி.மு.க. தொண்டர்களும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

தலைவா, எழுந்து வா என கோஷமிட்டபடி, விடியவிடிய திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பாக காத்துக்கிடக்கின்றனர். மருத்துவமனை முன்பு சூடம் ஏற்றபபட்டு, இரவு முழுவதும் வழிபாடுகளும் நடைபெற்றன. இதனிடையே,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ,சட்டம், ஒழுங்கை பராமரிப்பது தொடர்பாகவும் சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர்களுடன், ஆணையர் ஏ.கே.விசுவநாதன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, மருத்துவமனை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கருணாநிதி உடல் நிலை தொடர்பான காவேரி மருத்துவமனை அறிக்கை இன்று பிற்பகல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,