பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு இந்திய பக்தர்களின் பயணம் இந்த ஆண்டிலேயே தொடங்கும்..!

101

பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்கு இந்திய பக்தர்களின் பயணம் இந்த ஆண்டிலேயே தொடங்கும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூருக்குச் சென்றுவர வசதியாக வழித்தடம் அமைப்பது குறித்து இந்திய – பாகிஸ்தான் அதிகாரிகள் வாகாவில் பேச்சு நடத்தினர். அப்போது பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவாராவுக்கு நாள்தோறும் ஐயாயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், விழாக்காலங்களில் கூடுதலாகப் பத்தாயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் இந்திய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்தியர்கள் மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளியினருக்கான அடையாள அட்டை வைத்துள்ளவர்களையும் அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். பக்தர்களின் வசதிக்காக இரு நாடுகளும் அவரவர் பகுதிகளில் பாலம் கட்டுவதற்கான திட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

பேச்சு நிறைவடைந்த பின் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குருநானக்கின் 550ஆவது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவாராவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார். கர்த்தார்பூரில் இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டதாகவும், அதைப் பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பேச்சில் கலந்துகொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகச் செய்தித்தொடர்பாளர் முகமது பைசல், இருநாடுகக்கிடையான பேச்சில் 80 விழுக்காடு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், மீதி விவகாரங்கள் குறித்து மற்றுமொரு சுற்றுப் பேச்சு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.