காவிரி விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை திருத்தக்கோரும் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்சநீதிமன்றம், அதனை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

251

காவிரி விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை திருத்தக்கோரும் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்சநீதிமன்றம், அதனை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த 5–ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 6–ஆம் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, கர்நாடக அரசின் சார்பில், உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, கர்நாடகா காவிரியில் 66 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட்டாலும், அந்த தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை என தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசின் இடைக்கால மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, கர்நாடக மாநில அரசு சார்பில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும், தமிழக அரசு தெரிவிப்பதில் உண்மை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என கூறிய உச்சநீதிமன்றம், சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, கர்நாடக அரசு வரும் 17ஆம் தேதி வரை 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் எனவும், 18ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு, அதாவது 20ஆம் தேதி வரை 12 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த புதிய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கர்நாடகா கோரிக்கை விடுத்துள்ளது. இதனை மீண்டும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.