கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள்?

185

கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால், ஆளும் கூட்டணி அரசின் பலம் 101 ஆகக் குறைந்தது. இந்தநிலையில், கர்நாடக சட்டசபை நேற்று கூடியவுடன், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜகவினர் முழக்கமிட்டனர். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால், பேரவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நீடித்தது. இதனால், அவையை ஒத்திவைக்கும் சபாநாயகரின் அறிவிப்பை ஏற்க மறுத்த பாஜக உறுப்பினர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பேரவையிலேயே இரவு முழுக்க உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விதான் சவுதாவில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஆளுநரை நேற்றிரவு சந்தித்தனர். அப்போது, சபாநாயகர் வேண்டுமென்றே வாக்கெடுப்பை தாமதம் செய்வதாக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர். இதனை பரிசீலித்த ஆளுநர், இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கும்படி குமாரசாமிக்கு உத்தரவிட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.இந்நிலையில், இன்று காலை மணிக்கு சட்டசபை கூடியவுடன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக நேற்றிரவு முழுவதும் சட்டசபைக்குள்ளேயே எடியூரப்பா மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ்-பாஜக உறுப்பினர்களின் மோதலால் கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற குழுப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.