கர்நாடக பந்த் எதிரொலி: தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!!

317

பெங்களூர், ஜூலை. 30–
மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓசூரில் நிறுத்தப்படுகிறது. ஜூஜூவாடி எல்லையை தாண்டி செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக போலீஸ் அனுமதி அளித்துள்ளது.
மகதாயி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தில், வட கர்நாடகத்தின் 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு மகதாயி நதியில் இருந்து 7.56 டிஎம்சி தண்ணீரை கலசா-பண்டூரி கால்வாய் வழியாக எடுத்துக்கொள்ள அனுமதி கோரி கர்நாடக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், கர்நாடகத்தின் மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையடுத்து, கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் கன்னட திரைப்படச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று, சனிக்கிழமை மாநிலம் தழுவிய பந்த் நடத்த முடிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட வேண்டும் என்பது கன்னட அமைப்புகள் கோரிக்கையாக உள்ளது.
கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, மகதாயி நதி நீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதை இதை வலியுறுத்தி, இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் பந்த் தொடங்கியது. மாலை 6 மணி வரை பந்த் தொடரும்.
பந்த்துக்கு அரசே மறைமுக ஆதரவு அளிப்பதாக கூறப்படுவதால், கர்நாடக அரசு பஸ்கள் இயங்கவில்லை. பெங்களூரில் சிட்டி பஸ்களும் இயங்கவில்லை. ஆட்டோக்கள், கால் டாக்சிகளும் இயங்கவில்லை. இயக்கப்பட்ட சில ஆட்டோக்கள், கால் டாக்சிகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை உடைத்ததால் அச்சமடைந்த பிற வாகன ஓட்டிகளும் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்திவிட்டனர். தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் ஓசூரில் நிறுத்தப்படுகிறது. ஜூஜூவாடி எல்லையை தாண்டி செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக போலீஸ் அனுமதி அளித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. பந்திற்கு, உணவக சங்கம், நகைக்கடை சங்கம் உள்ளிட்ட 1500 அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே நகைக்கடைகள், ஹோட்டல்களும் திறக்கப்படவில்லை. பெங்களூருக்கு வந்த வெளி மாநிலத்தவர்களும் பந்த்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.