ஆட்சியைக் காப்பாற்ற முதலமைச்சர் குமாரசாமி தீவிரம்..!

135

பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி தப்புமா என அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றனர். மேலும், 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால், 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பேரவையில், 16 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததால், ஆளும் கூட்டணி அரசின் பலம் 101 ஆகக் குறைந்தது. இதனையடுத்து, அரசைக் காப்பற்ற முதலமைச்சர் குமாரசாமி, துணைமுதல்வர் பரமேஸ்வரா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகச் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர்களும், அடுத்த வாரத்தில் கர்நாடகத்தில் பா.ஜ.க. அரசு அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா மீது முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்றும், அவர்களைச் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.