கர்நாடக அரசு பேருந்து ஊழியர் போராட்டம் 142 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

289

பெங்களூர்,ஜூலை.26–
கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 142 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
ஊதிய உயர்வு, தினப்படிஉயர்வு, குடும்ப மருத்துவச்சலுகை உள்ளிட்ட 41 கோரிக்கைகளை முன்வைத்து, கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம், பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம், வடமேற்கு கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த ஊழியர் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களை ஒருங்கிணைக்கும் கேஎஸ்ஆர்டிசி ஊழியர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் பங்கெடுத்துள்ளதால், ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

மாற்று ஏற்பாடு

வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளிக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தது.
தனியார் பேருந்துகள், மேக்சி கேப்களை தாராளமாக இயக்க அரசு அனுமதி அளித்தது. உரிமம் பெறாத வழித்தடங்களிலும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பேருந்துகள், மேக்சி கேப்கள் இயக்கப்பட்டன.
மைசூரு, ஹுப்பள்ளி, பெலகாவி, கலபுர்கி, பெல்லாரி, மங்களூரு போன்ற மாநகராட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களிலும் நகரசேவைக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பெங்களூரில் மேக்சிகேப்கள் தவிர, ஆட்டோக்கள், மெட்ரோ ரெயில் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவு செய்தன.
பொது விடுமுறை
மாநிலம் முழுவதும் இயங்கும் அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்வதற்கு அரசு பேருந்துகளையே மாணவர்கள் நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் இயங்கும் அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஒரு சில மாவட்டங்களில் நேற்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பால் மாணவர்கள் பரிதவிப்பது தவிர்க்கப்பட்டது.
போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்கள், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேற்று மட்டும் விடுமுறைக்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்வதால், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஊரகப்பகுதிகளில் இருந்து வியாபாரம், மருத்துவம், வேலைக்காக நகரங்களுக்குத் தினமும் வந்து செல்லும் பொதுமக்களுக்கு பேருந்து ஊழியர்கள், தொழிலாளர்களின் போராட்டம் தொந்தரவை ஏற்படுத்தியது.
மருத்துவ சேவைகளைப் பெற நகரங்களுக்குச் செல்ல முடியாமல் கிராம மக்கள் பெரிதும் பரிதவித்தனர். இதனால் வேன்கள், லாரிகளில் ஏறி நகரங்களுக்கு சென்றனர். தனியார் பேருந்துகளில் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக நேர்ந்தது.
பெங்களூரு, ஹாசன், ஹுப்பள்ளி, பெலகாவி, பெல்லாரி, சித்ரதுர்கா, தும்கூரு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் மாநிலம் முழுவதும் 142 பேருந்துகளின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. பேருந்துகள் சேதம் அடைந்ததால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.20 லட்சத்திற்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் யஷ்வந்த்பூர், மைசூருசாலை, தும்கூருசாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால் அங்கெல்லாம் பதற்றமான சூழல் நிலவியது. பேருந்துகள் இயக்கப்படாததால் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.27 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு
அரசுப் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டதால், பேருந்து நிலையங்கள், பணிமனைகள், முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஒருசில அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
பயணிகளுக்கும் பாதுகாப்பு வழங்க பேருந்து நிலையங்களில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது.
தமிழகப் பேருந்துகள் சேதம்
தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்துகள் வழக்கம்போல பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் எல்லை நகரங்களில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட்டன. பெங்களூரில் இருந்து நேற்று சேலத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழகப் பேருந்து மீது யாரோ கல்வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதனால் தமிழகப் பேருந்துகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. பின்னர் போலீஸ் துணையுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பிறகு எவ்விதத் தொந்தரவுமில்லாமல் தமிழகப் பேருந்துகளில் பொதுமக்கள் பயணித்தனர்.
இன்றும் வழக்கம்போல தமிழகப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக விரைவு போக்குவரத்துக்கழகம், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தெரிவித்துள்ளன.