கர்நாடகாவின் கடலோர மற்றும் மால்டா பகுதி மாவட்டங்களில் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கடலோர மற்றும் மால்டா பகுதியில் உள்ள தக்ஷினா கன்னடம், உடுப்பி, சிக்மகலுரு, கொடகு, ஹாசன் மற்றும் உத்தர கன்னட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள பல கிராமங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் தவித்து வருகின்றனர். மண் சரிவு மற்றும் கன மழை காரணமாக, மங்களூரிலிருந்து பெங்களூரு வரை பேருந்து சேவைகளை கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் ரத்து செய்துள்ளது.

வெள்ளம் காரணமாக, குடகு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் குழு , தீயணைப்பு மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ள சேதத்தை மதிப்பிட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணிக்காக முதலமைச்சர் குமாரசாமி, 200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.