கர்நாடகாவில் தீவிரமடையும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம். ஊதிய கோரிக்கையை ஏற்கமுடியாது என முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டம்.

271

ஊதிய உயர்வு கோரிக்கையை முதலமைச்சர் சித்தராமையா நிராகரித்து விட்டதால் போராட்டத்தை தீவிரப்படுத்த கர்நாடகா அரசு போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் ஒன்றரை லட்சம் ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு எட்டு சதவீத ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த ஊழியர்கள் 35 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க சித்தராமையா அரசு மறுத்துவிட்டதால் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் கர்நாடகா முழுவதும் 23 ஆயிரம் அரசுப்பேருந்துகள் இயங்கவில்லை. பெங்களூரூவில் மட்டும் 7 ஆயிரம் பேருந்துகள் இயங்காததால் அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வேலைநிறுத்ததால் கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு அரசுப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்க முடியாது என முதலமைச்சர் சித்தராமையா திட் வட்டமாக கூறியுள்ளார். வேலைநிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.