தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

552

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி கண்காணிப்புக்குழு உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் போராட்டம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். காவிரி தாய் பாதுகாப்புக்காக சிறப்பு பூஜைகளும், தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மாண்டியாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் அனைத்து டிவி சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கே.ஆர்.எஸ். அணைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு முழுவதும் பதற்றமான இடங்களில் பாதுகாப்பிற்காக அதிவிரைவு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு, ஹக்கனப்பள்ளி, லகேரி, அந்தர்ஹள்ளி,உள்ளிட்ட பல இடங்களிலும், மாண்டியா, ராம்நகர், மைசூரு மாவட்டங்களிலும் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரும் 25ஆம் தேதி வரை பெங்களுருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.