கர்நாடகச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிப்பு..!

189

கர்நாடகச் சட்டப்பேரவையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு திங்கட்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகச் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், முதலமைச்சர் குமாரசாமி கால தாமதம் செய்து வருகிறார். ஆட்சியின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் தொடர்பாக விவாதம் முடியாமல், வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் ரமேஷ் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமக்கு விதித்த இரண்டு காலக்கெடுவையும் புறக்கணித்த முதலமைச்சர் குமாரசாமி, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனத் தம்மை ஆளுநர் நிர்ப்பந்தித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஆளுநர் உத்தரவை நிறைவேற்றாததால், அதன் மூலம் ஏற்படும் விளைவில் இருந்து தம்மை சபாநாயகர் காப்பாற்ற வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை விவாதம் நடத்திய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று ஆளும்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சியினர், ஆளுநர் கடிதத்தைச் சுட்டிக்காட்டி, இரவு 12 மணி ஆனாலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்னும் சில உறுப்பினர்கள் உரையாற்ற இருப்பதால், சட்டப்பேரவைக் கூட்டத்தை வரும் திங்கட்கிழமை காலை வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். அன்றே நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.