52 ஆண்டுகளுக்கு பிறகு ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கு..!

555

கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பியது. அணைகளில் பாதுகாப்பு கருதி 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் 52 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுவில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், காவேரி கரையோரப் பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயனூர் அணையின் 67 மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கரையோரப் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுவதால், தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். பவானி சாகர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. பழைய ஆற்றுப் பாலத்தில் நீரோட்டத்துக்கு இடையூறு அளித்த ஆகாய தாமரை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோவை பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து, 57 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் கோவை குனியமுத்தூர் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 20 ஆயிரம் கனஅடியில் இருந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வரத்தின் காரணமாக பாலத்தின் 19 வது தூண் இடியும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அமராவதி அணைக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.