கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சத்து,65ஆயிரம் கனஅடி நீர் திறப்பு..!

242

மேட்டூர் அணையில் இருந்து 86 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளான, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சத்து, 65ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது. ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 87 ஆயிரத்து 544 கன அடியாக உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து வினாடிக்கு 86 ஆயிரத்து 491 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 105 அடியில் 102 அடியை எட்டியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து, அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் காவிரி கரையோரம் உள்ள 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.