mango fest karaikkal ammayar

காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவராகும். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில் கொண்டு, காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் மாங்கனித் திருவிழா, மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவையொட்டி, பரமதத்தருக்கும் புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை அதிகாலை பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகாஅபிஷேகமும், சிவபெருமான் சிவனடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும்வகையில், மாங்கனிகள் வாரி இறைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.மாங்கனி திருவிழாவையொட்டி, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.