குழந்தைகள் காப்பங்களுக்கு உரிமம் பெறாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை! தமிழகஅரசு அறிவிப்பு!!

301

சென்னை, ஆக.2–
தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்களுக்கு உரிமம் பெறாவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள் இளைஞர் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். தவறினால், ஓராண்டு சிறை அல்லது ரூ.1 லட்சத்துக்கும் குறையாத அபராதம் அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். விவரங்களுக்கு சமூக பாதுகாப்புத்துறை இயக்குநரை அணுக வேண்டும். மேலும் 044–26427022,26426421 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
18 வயது வரை
சமுதாயத்தில் உள்ள குழந்தைகளின் பெற்றோரால், பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் அல்லது பெற்றோர் இன்றி தவிக்கும் குழந்தைகளை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் நிலையில் பராமரிக்க தயாராக இருப்பவர்கள் நேரடியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவை அணுகலாம். வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருக்கு குழந்தைகக்கு ரூ.2 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகியகாலம் அல்லது நீண்டகாலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதிக்கப்படும். விண்ணப்பம், நிபந்தனைகள், நடைமுறைகளை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகங்களை நேரில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.