கன்னியாகுமரி, லட்சத்தீவுகளை சூறையாடி, மும்பையை நோக்கி நகரும் ஒகி புயல்!

722

கன்னியாகுமரி, கேரளா மற்றும் லட்சத்தீவுகளை ஒரு கை பார்த்த ஓகி புயல், மும்பை நோக்கி நகர்வதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் குஜராத் கடல் பகுதியில் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன், கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஓகி புயலால் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், கன்னியாகுமரி மாவட்டம் இந்த ஒகி புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக உருக்குலைந்து முடங்கியுள்ளது. மாநில அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, 3 மாவட்டங்களிலும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, கன்னியாகுமரி வழியாக, கேரளாவின் தென்பகுதிக்கு சென்ற ஒகி புயல், அம்மாநிலத்திலும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்த ஓகி புயல், அங்கும் பேய்க்காற்று, கனமழையை தந்துள்ளது. ஓகி புயல் காரணமாக தமிழகம், கேரளாவில் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் தத்தளித்து வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடற்படை, கடலோர காவற்படையினர் இதுவரை 233 மீனவர்களை மீட்டுள்ளனர். மேலும் புயல் தாக்கிய பகுதிகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர்.
இதனிடையே, தமிழகம், கேரளாவில் கோரத் தாண்டவம் ஆடிய ஓகி புயலானது வடக்கே மும்பையை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலின் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயல் குஜராத் கடல் பகுதியில் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.