கடல் சீற்றத்தால் 18 கடலோர கிராமங்கள் பாதிப்பு | 150-க்கு மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் அவதி ..!

1220

கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்வதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலலை 10 முதல் 15 அடி உயரம் மேலெழுந்து வருகிறது. 18 மீனவ கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

குளச்சல், மண்டைக்காடு, பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வருவாய் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

பள்ளம் பகுதியில் கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகளால் மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

குளச்சல் பகுதியில், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான விசைப்படகு ராட்சச கடல் அலையில் சிக்கி சேதமடைந்துள்ளது. விசைப்படகின் பெரும்பாலான பகுதி கடலுக்குள் மூழ்கிய நிலையில், அதனுள் இருந்த பொருட்களை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். ராட்சச அலையால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், கடலோர பகுதிகளில் செல்பி மற்றும் படம் பிடித்து வருபவர்களை காவல்துறையினர் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.