அடுத்த 48 மணி நேரத்திற்குள் புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் – முதலமைச்சர் உத்தரவு ..

310

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் புயல் சேதத்தை கணக்கிட்டு, வரும் 12ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், காணாமல் போன இரண்டாயிரத்து 570 மீனவர்களில் இரண்டாயிரத்து 387 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட மீனவர்கள் நிலை குறித்து குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன 294 மீனவர்களிள் 220 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கரை திரும்பாத 260 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, சேதமடைந்த பள்ளிகள், அரசு கட்டடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், சேதங்களை கணக்கிடவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிட்டு 12-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.