கவிஞர் கண்ணதாசனின் 90 வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

199

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் மற்றும் கணக்கிலடங்காத கவிதைகள் மூலம் தமிழ் திரையுலகை தன்வசமாக்கி கொண்டவர் கவிஞர் கண்ணதாசன். தனது கவிதைநயம் பொருந்திய எதார்த்தமான பாடல் வரிகளை கொண்டு, கோடான கோடி மக்களின் உள்ளம் கவர்ந்தவர். இவரின் 90-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை தி.நகரில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கண்ணதாசனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசனின் மகன்களான காந்தி கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.