கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை..!

192

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழக கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் பலத்த காற்றும் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கொட்டாரம், இரணியல், களியக்காவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் மிதமான சாரலுடன் தொடங்கிய மழை பின்பு கன மழையாக நீடித்தது.

சூறைக்காற்றும் வீசியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வணிகர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கனமழை நீடிப்பதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.