மகளிர் பாதுகாப்புக்கு, போதிய அம்சங்கள் ஏற்படுத்தப்படவில்லை : திமுக எம்பி கனிமொழி

270

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழகத்தில் உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கு, போதிய அம்சங்கள் ஏற்படுத்தப்படவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, கனிமொழி தனது டுவிட்டரில், தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம், பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று கடந்த 1997-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013-ஆம் ஆண்டு செயல்படுத்தியதை நினைவு கூர்ந்துள்ள கனிமொழி, அரசு அலுவலகங்களிலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் தொடர்ந்து இருந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.